Saturday, April 30, 2016

ஜெய் மகாராஷ்டிரா



மே 1, உழைப்பாளர்கள்  தின வாழ்த்துகள்.
மே 1, மகாராஷ்டிர தினமும் கூட.
சென்னை மாநிலத்தைப் போலவே பம்பாய் பிரசிடென்சியும்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசத்தின் சில  பகுதிகளை உள்ளடக்கியதாக  இருந்தது.  மொழிவழி மாநிலமாக இந்தியாவைப் பிரிப்பதற்கு முதலில் ஆதரவு கொடுத்த காங்கிரசு ஆட்சிக்கு வந்தப்பின் அப்பிரிவு இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கருதியது.
நேரு இக்கருத்தில் உறுதியாக இருந்தார். ஆனால் மராத்தி பேசும் மக்கள்
தங்களுக்கான மாநில கோரிக்கையை முன்வைத்து பிப். 6, 1956ல் சம்யுக்த மகாராஷ்டிர சமிதியை உருவாக்கினார்களா. அவர்களின் தொடர் போராட்டத்தில் ஃப்ளொரா பவுண்டனில்
அவர்கள் நடத்திய பேரணியில் பலர் உயிரிழந்தார்கள். அன்றைய நிதித்துறை அமைச்சராக இருந்த டி. தேஷ்முக்  தன் எதிர்ப்பை காட்ட பதவி விலகினார். சற்றொப்ப 105 பேர் உயிரிழந்தார்கள். அவர்களுக்கான நினைவு சின்னம் தான் ஹுடாம சவுக்கில்  இருக்கிறது. இப்போராட்டத்தில் பம்பாய் நகருக்கு மராட்டியர்களும் குஜராத்திகளும் உரிமை கொண்டாடினார்கள். நடுவண் அரசோ பம்பாய் நகருக்கு தனி ஸ்டேட்
அந்தஸ்த்து கொடுக்க விரும்பியது. பம்பாய் எங்கள் நகரம், பம்பாய் எங்கள் மண்,
என்று இம்மண்ணின் மைந்தர்கள் எடுத்த போராட்டம் வெற்றி பெற்றது.
மே 1, 1960 ல் மகாராஷ்டிர மாநிலம் பிறந்தது.
இன்றைய தினத்தை மகாராஷ்டிர மாநிலத்தவர் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடுகிறார்கள்.
ஜெய் மகாராஷ்டிரா என்ற முழக்கத்துடன்.

சீமான்

சீமான் அரசியல்வாதியா?
இன்னொரு கெஜ்ரிவால் போல சீமான் ஆக முடியுமா?
அல்லது
சீமான் ஒரு கனவுலத்தை விரும்பும் இளைஞர்களுக்கு
நம்பிக்கை ஊட்டும் தலைவராக வளர்ந்து கொண்டிருக்கிறாரா?
நாம் தமிழர் கட்சிக்கோ சீமானுக்கோ எந்த ஒரு ஊடகத்தின்
ஆதரவும் இல்லை என்றாலும்
இளைஞர்களின் ஆதரவு ஏறுமுகமாக இருக்கிறது.

தினத்தந்தி தொலைக்காட்சியில் பாண்டேயின் கேள்விகள்
ஒவ்வொன்றாக விழும்போது சீமான கொஞ்சம் தடுமாறினார்,

:உங்களுக்கு என்னய்யா வேனும்?
காரு வேண்டுமா?
இறக்குமதி செய்யறேன்யா...!
என்று சொன்னபோது கொஞ்சம் பொருளாதரம் இடித்தது.
இறக்குமதி செய்வதற்கு பணம் வேண்டுமே! அதை எப்படி பெறுவது?
ஏற்றுமதி இருந்தால் தானே இறக்குமதியை சரி செய்யலாம்.
இந்த இரண்டும் ஏறுமாறாக இருப்பதால்தானே இந்திய ரூபாயின்
மதிப்பு இறங்குமுகமாகவே இருக்கிறது.
இந்த லாஜிக் ரொம்ப சிம்பிள்.

எது எப்படியோ சீமான் ஒரு சக்தியாக ,
திராவிட அரசியலுக்கு மாற்றுசக்தியாக வளர்ந்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்
என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லும் காலம் வ்ரவில்லை.
தமிழ்நாட்டு வாக்களர் பட்டியலில் 18 வயது முதல் 39 வயதுவரை
உள்ள வாக்களர்கள் மொத்த வாக்களர்களில் சற்றொப்ப 50%..
என்பதையும் கணக்கில் கொண்டால் எதிர்காலத்தில்
தமிழக் அரசியலில்
சீமான் கவனிக்கப்பட வேண்டியவர்.

Monday, April 25, 2016

விருத்தாசலமும் கனக சுப்புரத்தினமும்





இவர்கள் இருவரும் நண்பர்கள், சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் இருக்கும்
கருத்தியல் ரீதியான வேறுபாடுகளுக்கு நடுவில் இருவரும் ஒருவரை ஒருவர் கொண்டாடினார்கள், மதித்தார்கள்,
ஆனாலும் என்னவோ இவர்கள் இருவரையும் கொண்டாடியவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை, புரிந்துணர்வை.. ..
பெரிதாக பேசிக்கொள்வதில்லை.
ஒருவர் என் தந்தை கொண்டாடிய பாரதிதாசன் என்ற கனகசுப்புரத்தினம்.( தன் ஒரே மகனுக்கு சுப்புரத்தினம் என்று பெயர் சூட்டி பெருமை கொண்டவர் என் தந்தை பி.ஏஸ்.வள்ளிநாயகம் அவர்கள்)
இன்னொருவர் நான் என் வாசிப்பில் கண்டடைந்த புதுமைப்பித்தன் என்ற விருத்தாசலம்.
"தமிழர்களுக்கு பாரதியார் விட்டுச்சென்ற செல்வங்களில் குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலிசபதம் இவைதவிர பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினமும் ஒருவர்"
என்று உரக்க சொன்னவர் புதுமைப்பித்தன்.
1931க்குப் பின் வெளிவந்த மணிக்கொடி இதழ்களில் பாரதிதாசனின் மிகச்சிறந்த கவிதைகள் வெளிவந்துள்ளன. அக்கவிதைகளைக் கொண்டாடுகிறார் திஜரா.
பாரதிதாசனுக்கு அறிஞர் அண்ணா 29/07/1946 ல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொற்கிழி வழங்கியபோது அந்த நிதிதிரட்டும் குழுவில் உறுப்பினராக இருந்தவர் புதுமைப்பித்தன். பொருளாதர நெருக்கடி, வேலை இல்லை.. இச்சூழலில் புதுமைப்பித்தன் தன் பங்கிற்கு வழங்கி இருந்த
அன்பளிப்பு தொகை ரூ.100/ .... !!
புதுமைப்பித்தனை கொண்டாடும் மணிக்கொடி வட்டமும் சரி,
பாரதிதாசனைக் கொண்டாடிய/கொண்டாடும் திராவிட இயக்க/ திராவிட அரசியல் மேடைகளும் சரி..
இந்த இருவருக்கும் நடுவில் இருந்த தமிழ் உறவை
ஏன் கொண்டாடவில்லை?
புதுமைப்பித்தன் பிறந்தநாள் : 25 ஏப்ரல் 1906
பாரதிதாசன் பிறந்தநாள் : 29 ஏப்ரல் 1891.

Tuesday, April 19, 2016

நிலம் எனும்..

நிலம் எனும்
-----------------


"அம்மா... உழவர்களும் அவர்களின் தொழிலும் இவ்வளவு உயர்ந்தது என்றால்
ஏனம்மா என்னை நீ விவசாயி ஆக்கவில்லை?" என்று என் மகன் கேட்பது போல.ஒரு பொங்கல் நாள் முகநூல் பதிவில் எழுதியிருந்தேன்.
நாம் அனைவருமே விவசாயத்தை, விவசாயிகளைக் கொண்டாடுகிறோம்,
மதிக்கிறோம், கவிதை எழுதுகிறோம், இன்னும் என்னவெல்லோமோ
செய்து கொண்டிருக்கிறோம். ஆனால்.. நம் வீட்டிலிருந்து ஒருவரையும்
அந்த மையப்ப்புள்ளிக்குள் விட்டுவிடாமல் மிகவும் பத்திரமாக
வெளிவட்டத்தில் சுற்றவிட்டிருக்கிறோம்.
கிராமத்தில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? ஒவ்வொரு வீட்டின் திண்ணையிலும் மச்சியிலும் நெல்லும் தானியங்களும் காய்ந்து கொண்டிருக்கும்.. 30  வருடங்களுக்கு முன்.
இப்போது எந்த வீட்டிலும் நெல் மூடைகளை காணவில்லை. இலவச தொலைக்காட்சியில் மக்கள் மெகா தொடர்களைப் பார்க்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏதொ கிடைக்கிறது. வீட்டுக்காவலுக்கு பெரிசுகள் மட்டும் . மாதாமாதம் அவர்களுக்கு
நகர்ப்புறத்திலிருந்து வரும் மணியார்டருக்காக தபால்காரரை எதிர்பார்த்து
காத்திருக்கிறார்கள்.
நகர்ப்புறங்களில் வீடுகள்..  வீடுகள்.. வீடுகள் .. வீட்டு மனைகள்..
இப்போதெல்லாம் வீடுகளொ வீட்டு மனைகளோ குடியிருப்புக்கானவை மட்டுமல்ல.
 அவர்களின் அசையா சொத்து, சில வருடங்களில்
ஒன்றை பத்தாக்கும் அலாவூதின் அற்புதவிளக்கு.
இந்த இரு வாழ்க்கையின் போராட்டங்கள்.. ஆண் - பெண் உறவில் ..
சு.வேணுகோபாலின் "நிலம் எனும் நல்லாள்" நாவலாக...
நிலம் சார்ந்த மனிதனாக பழனிக்குமார்.
நிலத்தை வாழ்க்கையாக நினைக்கிறான்.
நகரத்தில் வாழும் அவன் மனைவிக்கு நிலம் வாழ்க்கை அல்ல.
அது ஒரு சொத்து. பண மதிப்பீடு.
தன் நிலத்தை விற்பது என்பது பழனிக்குமாருக்கு தன் ஜீவனைக் காயப்படுத்துவது போல.
அவன் மனைவிக்கு நிலத்தை விற்பது என்பது லாப நஷ்ட கணக்கு.
இந்தப் போராட்டத்தில் அவர்களுக்குள் இருந்த காதல் காணாமல் போய்விடுகிறது.
இரண்டு பூனைகளும் சண்டைப்போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் காயப்படுத்துவது போல கழிகிறது அவர்கள் வாழ்க்கை.
அவரவருக்கான நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் .. பழனிக்குமாரும் ராதாவும் நமக்குள்
.. ஒருவகையில் இது எம் தலைமுறையின் நாவல்.

பழனிக்குமாரின் பிள்ளைகளுக்கு இப்பிரச்சனை இருக்காது.
அவர்கள் மனைகளை வாங்கலாம், விற்கலாம்..
அவர்கள் மனைகளின் தரகர்களாக இருப்பார்களே தவிர
நிலத்தின் மைந்தர்களாக
 நிலத்துடன் உறவு கொண்ட மனிதர்களாக இருக்கப்போவதில்லை.
நாவலில் சில வரிகள்:
"அகல விரித்த கால்களுக்கிடையில் கோயிலைக் குவித்துச் சேர்த்து உருட்டிக்கொண்டிருக்கும் மாசாணி, தன் பருவம் பற்றி அறியாப் பேதை மாசாணி. மணற்கோவில் இந்த மாசாணி முன் ஒன்றுமில்லை. அது வெறும் மணல். அவள் உயிரோட்டமுள்ள கோவிலாக அமர்ந்திருக்கிறாள். பாவாடை ஏறி விலகி மாசாணியின் கருவறை வாசல் பயமுறுத்துகிறது. அவள் கால்களுக்கிடையில் கன்னி கனலாய்ச் சுடர்கிறாள். மனிதவடிவில் தான் கோயில்களை உருவாக்கியிருக்கிறானோ
ஆதிக் கலைஞன். ஆதி அம்மை, அங்கையற்கண்ணி உடலே கோபுரமாக அமர்ந்திருக்கிராள்.
அணையா விளக்கை நேருக்கு நேர் பார்க்கக் கூச்சமாக இருக்கிறது..."
(தமிழினி வெளியீடு.)


Saturday, April 16, 2016

முரண்வெளி


முரண்கள் எல்லாம் பகை முரண்கள் அல்ல.
உடன்பாடுகள் எல்லாம் நட்பு உடன்படிக்கைகளும் அல்ல.
முரண்வெளியில் பயணிப்பது கத்திமுனையில் நடப்பது போலதான்.
நட்பு முரண்களாக என் வெளி விரிகிறது.
லெனின் சொன்னது போல என் ஆயுதத்தை நான் தீர்மானிப்பதில்லை.
என் எதிரில் நிற்பவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
காந்தி மகானைப் போல நான் அஹிம்சைவாதி அல்ல.
நிராயுதபாணியாக வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை
கொலை செய்த களம்.. 
அபிமன்யுவின் மரணத்தைவிட கொடியது.
தனிமனித ஆசாபாசங்களில் எவரும் எனக்கு வேண்டாதர்கள் அல்ல.
எந்த மூலையில் அநியாயம் நடந்தாலும்
உங்கள் உள்ளம் கொதிக்கிறதா.. அப்படியானால் நீ என் நண்பன்..
என்று என்னருகில் வந்து மீண்டும் சொல்கிறான் சேகுவேரா.
நான் சொல்வதை எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல என் எதிர்ப்பார்ப்பு.
ஆனால் அதைச் சொல்வதற்கான என் உரிமையை எவரும் பறித்துவிட முடியாது..
வால்டேர் எனக்காகவே .. உங்களுடன் பேசுகிறான்.
காதலைப் பற்றியும் கத்தரிக்காய் குழம்பு வைப்பதை பற்றியும் எழுதுவதில்லை தான். நான்!
எழுதத்தெரியாது என்பதால் அல்ல.!!
அபிப்பிராயங்கள் உண்மைகளாகிவிடுவதில்லை.
நான் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும்
என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் என்னிடமில்லை. 
காலம் என் கைப்பிடித்து எழுதிக்கொண்டிருக்கிறது.
முடிவுகளை விட முயற்சிகள் முக்கியமானவை.
வெற்று வாழ்த்துகளில் செத்துக்கொண்டிருக்கும் ஜீவனுக்கு
நட்பு முரண்வெளி யில் ஒரு சொட்டு அமுது.

Wednesday, April 6, 2016

என்ன வை .....க்க்கோ




இப்படி விவரமில்லாத ஆளா இருக்கீங்களே.
தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு எப்படி ஓட்டுப்போடுவார்கள்?
ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்..
உங்கள் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கூட கால்நடை மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி கூட
உங்களுக்கு கொடுக்கமுடியாது போலிருக்கிறதே!!!
கலைஞர் என்ன சாதி?
இந்த விவரம் என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள்
இப்படி உளறிக்கொட்டும் வரைத் தெரியாமல் இருந்தது.
என்னதான் திராவிட அரசியல் வழி வந்தக் குடும்பத்தில்
பிறந்து வளர்ந்திருந்தாலும்.. நாங்கள் இந்த தகவல்
தொழில்நுட்பத்தில் ரொம்ப "வீக்".
வாழ்க எம் பெருமான் ஈ வெ. ரா.
ஆனால் எதையோ சொல்லிட்டு , அப்புறம் நீங்க
மாஞ்சி மாஞ்சி கெஞ்சி கெஞ்சி மன்னிப்பு
கேட்டிருக்கிறதை வாசிக்கும் போது எனக்கு
விக்கி விக்கி அழுகை வந்திடுத்து..
உங்களுக்கு கண்டனம் தெரிவிக்கத்தான் எழுத வந்தேனா..
ஆனா பாருங்க வைகோ.. உங்க கும்பகர்ண கதையைக்
கேட்டுட்டு உங்க மீது பரிதாபம் வேறு வந்து தொலைச்சிடுச்சி.
இந்த மாதிரி சாமாச்சாரத்தை எல்லாம் எப்போ யார் முன்னாலே பேசனும்னு ...
சரி.. சரி.. நீங்க இன்னும் கலைஞரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது..

Sunday, April 3, 2016

பஃறுளியின் வாசனை




புலம்பெயர்தல் என்பது
ஜீவராசிகளின் தொடர்கதை.
பனிப்பிரதேசத்தின் பறவைகள்
கூடுகட்டி குஞ்சுகள் பொறிக்க
நம் மண்ணின் மரக்கிளைகளைத் தேடி
பல்லாயிரம் மைல்கள் தாண்டி
பறந்து வருகின்றன.

கடல் சூழ்ந்த நம் பூமியில்
நம் கரைகளைத் தொடாத
பசிபிக் கடலின் ஆமைகளும்
முட்டையிடும் பருவத்தில்
நம் நெய்தல் நிலம் தேடி
பயணிக்கின்றன.

மனிதனும்
நிலம் தேடி நீர் தேடி
பசி தீர்க்க பயணித்த தூரத்தை
காலத்தை
கணக்கில் எடுத்தால்
பிரமிப்பாகவே இருக்கிறது.

இப்பயணங்களில் தமிழனின் குரல்
திரைகடலோடி திரவியம் தேடிய
பெருமையை ,
பொருள்வழிப் பிரிதல் என்று வகைப்படுத்தி
பெருமையுடன் பேசுகிறது.
இப்பெருமைகளின் மறுபக்கத்தில்
இன்றும் தங்கள் இருத்தலுக்காக
புலம்பெயரும் தமிழர்கள் இருக்கிறார்கள்.
இப்புலம்பெயர்தல்
நம் பெருமைமிகு வரலாற்றின்
இருண்ட மறுபக்கம்.
அந்த மறுபக்கத்தில்
அரபிக்கடலோர மித்திநதிக்கரையில்
நானும் என் கவிதைகளும்.

எல்லா நதிகளும் கடலில் சங்கமிக்கும்.
இது நதிகளின் உரிமை.
அந்த உரிமையும் மறுக்கப்பட்ட
மித்தி நதியில்
மிதக்கின்றன எங்கள் வாழ்க்கைப்படகுகள்.

நாலு தலைமுறைகளுக்கும் மேலாக
இந்த மண்ணில் எங்கள் வாழ்க்கை
எங்கள் இருத்தலுக்கான வாழ்க்கையில்
தொட்டிச்செடிகளாகவே தொடர்கிறது
எங்கள் வேர்களின் பயணம்.

காங்கிரீட் காடுகளில்
கண்ணாடி ஜன்னல்களின் வழியாக
நீலநிற வானத்தை எட்டிப்பார்க்கும்
தொட்டிச்செடிகளின்
இலைகள் மட்டுமே அறியும்
மறுக்கப்பட்ட நிலத்தடி மண்ணின் வாசனையை
கட்டுடைத்துப் பயணிக்கும்
வேர்களின் பயணத்தை.

மாநகரத்தின் ஜனக்கடலில்
கரைந்துவிடவோ கலந்துவிடவோ முடியாமல்
ப்ஃறுளியின் மணல்மேடுகளில்
புதையுண்ட எங்கள் நிஜங்களைத் தேடி
கடலடியில் பயணிக்கிறோம்
ஆமைகளைப் போல.

கபாடபுரமும் குமரிக்கோடும்
எங்கள் கண்முன் விரிகிறது.
சிவனே எம் இனக்குழு தலைவனாய்
எங்களுடன் உரையாடுகிறான்.
கொற்றவையின் கைப்பிடித்து
நடக்கிறது எங்கள் கவிதை.

பெண்ணிய பெருவெளியில்
தந்தை பெரியாருக்கு முன் வாழ்ந்த
பெருமகனாய்
நெற்றிக்கண் திறந்து வழிகாட்டுகிறான் அவன்.
அவனோடு பயணிக்கிறேன்
அங்கே
மருதம் திரிந்த பாலையில்
அவன் மனைக்கிழத்தி
காதல் மறுக்கபப்ட்ட கொற்றவையாய்
பெருமூச்சு விடுகிறாள்.
என் கனவுகள் கலைகிறது.

மண்ணில் புதையுண்ட பஃறுளியின் ஈரம்
கடலடியில் நீரோட்டமாய்
பாய்ந்து வருகிறது.
அனாதையாக நிற்கும் எங்கள் இருத்தலை
முத்தமிட்டு வாரி அணைத்துக்கொள்கிறது.

பஃறுளியி மகள் நான்
நதிகளுக்கு என்று வரையறுக்கபப்ட்டிருக்கும்
எல்லைகள் கடந்து பயணிக்கிறேன்.
பஃறுளி என் முகம்.......
கதை என்றும் கட்டுரை என்றும்
விமர்சனம் என்றும்
கவிதை என்றும்
நீங்கள் கற்பித்திருக்கும்
அனைத்து வடிவங்களிலும்
அவளே நானாக..
என் மொழியாக..

மழைப்பொழியும் ஒரு கார்கால நள்ளிரவில்
பஃறுளியின் ஈரம்
என் தொட்டிச்செடிகளின் இலைகளில்
பட்டுத் தெறிக்கிறது..
நாளைய விடியலில்
என் தொட்டிச்செடிகள் பூத்திருக்கும்
எனக்காகவும் உங்களுக்காகவும்

அந்தப் பூக்களை
உங்கள் வாசலுக்கு எடுத்துவரும்
எழுத்து அறக்கட்டளைக்கும்
அறக்கட்டளை குழுவினருக்கும்
என் ஆதித்தாய் பஃறுளியின் வாழ்த்துகளுடன்.

உங்களன்பு,

புதியமாதவி.
மும்பையிலிருந்து,.

15 ஆகஸ்டு 2015 சுதந்திர தின நள்ளிரவில்..
(மவுனத்தில் பிளிறல் கவிதை தொகுப்பில்.. என்னுரை)