Monday, September 23, 2013

திரைக்கதை திருட்டுகள்







நான் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் முதுகலை படித்துக்கொண்டிருக்கும் காலக்கட்டம். அப்போது அன்னக்கிளி
படம் வெளிவந்து வெற்றி பெற்றிருந்தது. இளையராஜாவின்
இசைக் கொடிகட்டிப் பறந்தது. பல்கலை கழகத்திற்கு பல்கலைநகர்
பகுதியில் வசிக்கும் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் வருவார். எல்லோரிடமும்
தான் எழுதியிருந்த கதையின் நகலைக் காட்டி அந்தக் கதையைத்தான்
அன்னக்கிளி திரைக்கதையாக எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லுவார்.
அப்படி அவர் சொல்லும் போது அவர் நா தடுமாறும். குரல் கம்மும்.
பார்க்க ரொம்பவும் பாவமாக இருக்கும். 'வாத்தியார் சொல் அம்பலம்
ஏறுமா?' என்பது அவர் விசயத்தில் ரொம்பவும் உண்மையாகவே இருந்தது
என்பதை இப்போது உணர்ந்து கொள்ள முடிகிறது.
அந்த வயதில் ஏதோ அவரைப் பார்த்து 'பாவம் இந்த வாத்தியார்' என்று
எங்களுக்குள் பேசிக்கொண்டு நகர்ந்தோமே தவிர அது குறித்து விவாதித்தாகவே அல்லது அவர் பிரச்சனையை எடுத்துச் சென்றதாகவோ
நினைவில் இல்லை. அப்போது நான் முதலாண்டு மாணவி வேறு.
அடிக்கடி வந்துக் கொண்டிருந்தவர் அதன் பின் நான் இரண்டாமாண்டு படிக்கும் போது வருவதே இல்லை. நாங்களும் அதை எல்லாம் மறந்துவிட்டு
நவீன இலக்கியத்தின் கனத்தைச் சுமந்து கொண்டு தலைக்கனத்துடன்
திரிந்து கொண்டிருந்தோம்.

அதைப் போலவே நாங்கள் ரொம்பவும் விரும்பி போற்றிக் கொண்டாடிய
இயக்குநர் கே. பாலசந்தரின் "ஆபூர்வ ராகங்கள்' குறித்த சர்ச்சையும் வந்தது.
பாலசந்தர் அப்படியெல்லாம் செய்திருக்கவே மாட்டார் என்று அந்த வயதில்
எண்ணினேன். அதன் பின் அக்கதை குறித்த உண்மைகளும் கோர்ட் தீர்ப்பும்
வெளிவந்தது என்றாலும் மும்பை வாழ்க்கை ஓட்டத்தில் அதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது அந்த வழக்கு குறித்த செய்தியை கவிதாசரண்
எழுதியிருக்கும் "ஊற்றின் சீற்றம்" கட்டுரையில் வாசித்தேன்.

'கண்ணதாசன்' இதழில் எழுத்தாளர் என். ஆர். தாசன் அவர்கள் 1969ல் 'வெறும் மண் ' என்ற நாடகக்கதையை எழுதியிருந்தார். அக்கதையைத் திருடித்தான் பாலசந்தரின் அபூர்வராகங்கள் திரைக்கதையானது என்று 1975ல் தாசன் வழக்குத் தொடுத்தார். அந்த திருட்டுக்கு நஷ்ட ஈடாக அவர் கேட்ட தொகை
வெறும் ஒரு ரூபாய் மட்டும் தான். எனவே திருட்டை ஒத்துக்கொள்ள வைப்பது மட்டுமே தாசனின் நோக்கமே தவிர பாலசந்தரிடன் பணம் பறிப்பது அல்ல.

நீதிமன்றத்தில் பாலசந்தரின் வழக்குரைஞர் 'தாசனின் கதைத்தலைவன் தத்துவம் படிக்கிறவன். பாலசந்தரின் நாயகனோ ஒரு தீவிரவாதி. இதுவேபோதும் இரண்டுக்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க' என்று
வாதிட, அதற்கு தாசன் " காரைத் திருடுகிறவன் முதலில் காரின்  கலரைத்தானே மாற்றுவான்? அதுதானே நடைமுறை?" என்று வாதிட்டார்.

1981ல் தாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பாயிற்று. ஒரு ரூபாய்க்குப் பதில் ஆயிரம் ரூபாய் வழங்கத் தீர்ப்பாயிற்று. பாலசந்தர் மேல் முறையீடு செய்தார். பின்னர் வழக்கைத் தொடர பிடிக்காமல் திரு கோமல்சுவாமிநாதன் மூலமாக சமரசத்திற்கு முயற்சி செய்து அதன் படியே நீதிமன்றத்துக்கு வெளியே
நஷ்ட ஈடு வழங்கி முடித்துக் கொண்டார். அதன் பின் நீதிமன்றத்தில்
வழக்கை நாங்களே சமரசமாக முடித்துக் கொண்டதால் தன் கட்சிக்காரர் சார்பாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பாலசந்தர் வழக்குரைஞர் கேட்க,
:தீர்ப்பை உங்கள் விருப்பத்திற்கு வழங்குவது நீதிமன்றத்தின் வேலையல்ல"
என்று சொல்லி அந்த முறையீடு ரத்து செய்யப்பட்டது.

பாரதிராஜாவின் 'முதல்மரியாதை' கதையும் இந்த வரிசையில் பேசப்பட்டதும்
தோழர்கள் சங்கமித்ரா போன்றவர்கள் எழுதியதும் நினைவில் இருக்கிறது.

ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதும் என் தோழி ஒருவர் ஒருமுறை என்னிடம்
பேசிக்கொண்டிருக்கும் போது பெண்களும் அவர்கள் காணும் பாம்பு கனவுகளும் குறித்தச் செய்திகளைப் பேசிக்கொண்டிருந்தார்., அந்தப் பின்புலத்தில் தான் எழுத இருக்கும் கதையையும் என்னிடம் சொன்னார். நன்றாக இருக்கிறது, கட்டாயம் எழுதுங்கள் என்று சொன்னேன். அப்போது அவர்  சொன்ன செய்தி..
'எல்லோரிடமும் இம்மாதிரி எழுதுவதற்கு முன்பே கலந்துரையாட முடிவதில்லை என்றும் காரணம் கேட்பவர் அக்கதைக் கருவைத் திருடி
எழுதிவிடுவதாகவும் அங்கலாய்த்தார். இப்படியும் நடக்கிறது என்பதை அவர் சொன்னபோது நம்ப முடியவில்லை. இப்போது நம்புகிறேன்.
கூகுளின் கொடையாக இப்போதெல்லாம் எனக்கும் தெரியவருகிறது
என் வலைத்தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரைகளை அப்படியே வரிப்பிசகாமல்
யார் எழுதியது,? எந்த வலைப்பக்கத்திலிருந்து ? என்ற எந்த ஒரு குறிப்பும் இல்லாமல்    எடுத்துப் போட்டுக்கொள்ளும்  புண்ணியவான்கள் சிலர்  இருக்கிறார்கள் என்பது.